இளைஞர்கள் கடத்தல்: கடற்படை சிப்பாய் கைது

கொழும்பில் இளைஞர்கள் கடத்தல்: கடற்படை சிப்பாய் கைது

by Staff Writer 22-02-2019 | 4:11 PM
Colombo (News 1st) 2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று இளைஞர்களைக் கடத்திச் சென்று தடுத்து வைத்து, சித்திரவதைக்குட்படுத்தி, கொலை செய்த குற்றச்சாட்டிலேயே கடற்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் 41 வயதான நந்தபிரிய ஹெட்டிஹந்தி எனும் சிப்பாயே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இதேவேளை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் நீதிமன்றில் தெரிவித்திருந்தது. குறித்த விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்து, சட்ட மா அதிபரிடம் கையளிக்கவுள்ளதாகவும், வழக்கின் 12 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றுக்கு அறிவித்திருந்தது.