காணாமற்போன வர்த்தகர்கள் இருவரும் கொலை செய்து எரிக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது

by Staff Writer 22-02-2019 | 8:20 PM
Colombo (News 1st) காணாமற்போயிருந்த ரத்கம பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் இருவரும் கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டு, எரியூட்டப்பட்டுள்ளதை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கண்டறிந்துள்ளனர். வலஸ்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகங்கொட பகுதியிலுள்ள காட்டில் இவர்கள் இருவரையும் கொலை செய்த பின்னர் எரியூட்டியதாகக் கூறப்படும் இடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் மேலதிக விசாரணைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட 15 பேருக்கு தென் மாகாணத்தில் இருந்து மேல் மாகாணத்திற்கு இடமாற்றம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ருவன் குணசேகர குறிப்பிட்டார். மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் சிந்தக்க ஆகிய வர்த்தகர்கள் இருவரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி கடத்தப்பட்ட இடத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வீடொன்றை காலி பிரதம நீதவான் இன்று சோதனையிட்டார். காலி - உடுகம வீதியின் அக்மீமன, கோனாமுல்ல சந்திக்கு அருகில் இந்த வீடு அமைந்துள்ளது. இந்த வர்த்தகர்களை கடத்திச்செல்ல பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைப்பற்றிய வேனின் உரிமையாளரின் வர்த்தக நிலையத்தில் இருந்து 900 மீட்டர் தூரத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. வர்த்தகர்கள் இருவரையும் இந்த வீட்டிற்கு அழைத்து வந்து கொலை செய்த பின்னர் வேறு பிரதேசத்திற்கு சடலங்களைக் கொண்டு சென்று அழித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சந்தேகிக்கின்றனர். அதற்கமைய, அக்மீமனவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வலஸ்முல்ல - மெதங்கொட காட்டுப்பகுதி இன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த காட்டுப்பகுதியில் எரியூட்டப்பட்ட இடமொன்றை சோதனையிட்ட போது, மனித எலும்புக்கூடுகள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். வலஸ்முல்ல நீதவான் சுரங்க முணசிங்க, அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்தின் எரியூட்டப்பட்ட விடயங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பிரதம அதிகாரி ரொஷான் பெர்னாண்டோ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட குழுவினர் அந்த பகுதியை சோதனையிட்டனர். இதேவேளை, காணாமற்போன வர்த்தகர்கள் இருவரின் வீடுகளுக்கு நேற்று மற்றும் இன்று அநாமதேய கடிதங்கள் 2 கிடைத்துள்ளன. வர்த்தகர்கள் இருவரையும் கொலை செய்த முறை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நபர்கள் குறித்தும் சம்பவ இடம் தொடர்பிலும் ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கும் இன்று சோதனையிடப்பட்ட இடத்திற்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் விராஜ் மதுஷங்கவை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணைப்பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா ஏற்கனவே கைது செய்யப்பட்டதோடு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி மஞ்சுள அசேல மற்றும் ரஷீன் சிந்தக்க ஆகிய வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்டிருந்தனர். பொலிஸாரின் சீருடையைப் போன்ற ஆடையில் வருகை தந்த சிலர் ஆயுத முனையில் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றதாக குடும்பத்தினர் குறிப்பிட்டனர். வர்த்தகர்கள் இருவரும் தமது திணைக்களத்தின் பொறுப்பில் இருப்பதாக காலி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சதிஷ் கமகே கடந்த 5 ஆம் திகதி தெரிவித்ததாகவும் பின்னர் தாம் அவ்வாறு எதனையும் கூறவில்லையெனவும் கடந்த 14 ஆம் திகதி அவர் குறிப்பிட்டதாக வர்த்தகர்களின் உறவினர்கள் ஊடங்களுக்கு தெரிவித்தனர். தென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் உள்ள விசேட பிரிவினரால் குறித்த வர்த்தகர்கள் இருவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக கடந்த 6 ஆம் திகதி குடும்பத்தினர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்த அநாமதேய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதலின் போது வர்த்தகர் ஒருவர் உயிரிழந்ததாகவும் மற்றைய வர்த்தகர் அதனை பார்த்ததால் அவரையும் கொலை செய்து, இருவரையும் எரித்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலரே அந்த கடிதத்தை அனுப்புவதாக கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரின் உத்தரவிற்கு அமைய இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தன கொழும்பிற்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.