விக்னேஷ்வரனுக்கு எதிரான வழக்கு மே மாதம் பரிசீலனை

சி.வி. விக்னேஷ்வரனுக்கு எதிரான வழக்கு மே மாதத்தில் பரிசீலனை

by Staff Writer 21-02-2019 | 5:41 PM
Colombo (News 1st) வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யபட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்வரும் மே மாதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேற்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹிந்த சமயவர்தன முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி மற்றும் 31 ஆம் திகதிகளில் இந்த வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், முன்னாள் மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவநேசன் ஆகியோருக்கு எதிராக வட மாகாண கடற்றொழில் மற்றும் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சரான பா.டெனீஸ்வரனால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மேற்கொண்ட தீர்மானத்தை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவித்து இந்த மேன்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.