சர்வதேச தாய்மொழி தினம் இன்று

சர்வதேச தாய்மொழி தினம் இன்று

by Staff Writer 21-02-2019 | 8:34 AM
Colombo (News 1st) சர்வதேச தாய்மொழி தினம் இன்று (21) கொண்டாடப்படுகின்றது. 'தாய்மொழியை ஊக்குவித்து நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்' என்பது இவ்வருட தாய்மொழி தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே தாய்மொழி தினத்தின் முக்கியமான நோக்கமாகும். "தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் ஈங்கமரர் சிறப்புக் கண்டார்." மொழி சார்ந்த பற்றென்பது, தாயன்புக்கு நிகரானது. 1952 ஆம் ஆண்டு இதே போன்றொரு நாளில், வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்குமாறு கோரி தலைநகர் டாக்காவில் நடhத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த 4 மாணவர்களின் நினைவாக 1999 ஆம் ஆண்டு இந்த நாள், சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டது. 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி நடைபெற்ற, பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய்மொழி நாளாக யுனெஸ்கோ அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாடு, கலாசாரம் என்பனவற்றின் தனித்தன்மையை பேணிப் பாதுகாக்கும் நோக்கிலான கவசமாக இன்றைய நாள் கொண்டாடப்படுகின்றது. தமிழ் பேசும் மக்களின் சக்தியாய் தமிழை வளர்த்த போசகர்கள் அதிகம்! ஔவையார் தொட்டு இன்றைய கவிஞர்கள் வரையில் தமிழை செய்யுள் வடிவிலும் அனைவருக்கும் இலகுவாய் புரிந்திடச் செய்யும் வகையிலும் கவி வரிகளால் - சிந்தனை கடலால் அபிஷேகித்தவர்கள் பலர். திகட்டத் திகட்ட தமிழை பாடி மகிழ்ந்த அனைத்து புலவர்களும் கவிஞர்களும் சொற்விற்பன்னர்களும் இன்றைய நாளின் தலைவர்களாக போற்றப்பட வேண்டியவர்கள். 20 ஆம் நூற்றாண்டின் தவப்புதல்வன் ஆசுகவிக்கு பின்னர், அவன் வழிவந்த பல கவிஞர்கள் தத்தம் பாணியில் தமிழ் வளர்க்கின்றனர். ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியா சிறப்பைப் பெற்ற எம் தாய்மொழி தமிழை வளர்க்க அயராது உழைத்த அத்தனை ஆன்றோர்களும் சான்றோர்களும் இன்றைய நாளில் நினைவுகூரத்தக்கவர்கள்.