ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு 9 மாதங்களில் 24 பில்லியன் ரூபா நட்டம் 

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு 9 மாதங்களில் 24 பில்லியன் ரூபா நட்டம் 

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு 9 மாதங்களில் 24 பில்லியன் ரூபா நட்டம் 

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2019 | 8:01 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான சேவையின் கடந்த டிசம்பர் மாதத்திற்கான உள்ளக நிதி அறிக்கையில் இதுவரை வௌிவராத பல விடயங்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் அரச மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொடர்பாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் 2018 – 2019 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அடைந்துள்ள நட்டம் 24 பில்லியன் ரூபாவாகும்.

இந்த அறிக்கையின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியாகும் போது ஶ்ரீலங்கன் விமான சேவை நிதி நிறுவனங்களிடம் இருந்து 461.5 மில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளது.

இதில் முக்கியமாக இரண்டு அரச வங்கிகளில் முறையே 200 மில்லியன் டொலர் மற்றும் 198.18 மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டுள்ளது.

இதனைத் தவிர மேலும் 70 மில்லியன் டொலர் வங்கி மிகைப்பற்று வசதியும் பெறப்பட்டுள்ளது.

இந்த கடன் தொகையில் கடந்த வருட இறுதியில் செலுத்த வேண்டிய தொகையாக 400 மில்லியன் டொலர் காணப்பட்டது.

இதன் இலங்கை பெறுமதி 7184 கோடி ரூபாவாகும்.

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவு காணும் முறியொன்றுக்காக 175 மில்லியன் டொலர் அதாவது 31,430 மில்லியன் ரூபாவை ஶ்ரீலங்கன் விமான சேவை செலுத்த நேரிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான வட்டியாக 8 இலட்சத்து 23 ஆயிரம் டொலர், அதாவது 147 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகையை செலுத்த வேண்டியுள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செலுத்த வேண்டிய தொகை 1,28,484 மில்லியன் ரூபா அல்லது 128 பில்லியன் ரூபாவாகும்.

இதனைத் தவிர, பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக ஏற்கனவே பெறப்பட்ட வசதிக்காக மேலும் 36.53 மில்லியன் டொலரை செலுத்துவதற்கு எஞ்சியுள்ளது.

தொடர்ச்சியாக ஏற்படுகின்ற நட்டத்திற்கான பொறுப்பை ஏற்பதற்கு அரசாங்கம் தயாரில்லை என்பதால், ஃப்ரங்க்ஃபர்ட் (Frankfurt) மற்றும் பாரிஸ் (Paris) ஆகிய இடங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்துவதாக 2016 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் திகதி ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் ஊடக அறிக்கையொன்றில் அறிவித்திருந்தது.

அத்தகைய நிலைப்பாட்டில் இருந்து ஜனரஞ்சகமான ஐரோப்பாவிற்கான சேவைகளை நிறுத்தி அதற்கு பதிலாக அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் (Melbourne) நகருக்கான சேவையை நிறுவனம் ஆரம்பித்தது.

எவ்வாறாயினும், மெல்பர்னுக்கான சேவை நிறுவனத்திற்கு மேலும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியதாக உள்ளக நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புள்ள முறிகள் போன்ற முறைமைகளை பயன்படுத்தி நாட்டு மக்களின் கோடிக்கணக்கான நிதியை வீண் விரயம் செய்து தகைமையற்றவர்களுக்கு விமான சேவையை நிர்வகிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி, பார்த்துக்கொண்டிருப்பது யார்?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்