தன்னலமற்ற தொண்டர்களுக்கு V-விருதுகள் வழங்கி கௌரவிப்பு

by Staff Writer 21-02-2019 | 8:50 PM
Colombo (News 1st) தமது சேவை மூலம் மக்கள் மத்தியில் ஈர்ப்பினை ஏற்படுத்திய இலங்கையின் சிறந்த பிரஜைகளுக்கு V-விருதுகள் (V-Awards) வழங்குவதற்கான இறுதிப்போட்டி நேற்று (20) தாமரைத் தடாகத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம், இலங்கை அரசு, பல்வேறுபட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நியூஸ்ஃபெஸ்ட் ஆகியன இணைந்து V-விருதுகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தன. சமூகத்திற்கு அமைதியான முறையில் சேவையாற்றுபவர்களை கௌரவித்து, ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய தன்னார்வத் தொண்டர் விருதுகள் அல்லது V-விருதுகள் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. சுயநல நோக்கற்று இலங்கை சமூகத்திற்கு சேவையாற்றி கவனத்தை ஈர்த்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இம்முறை மூன்று மதிப்பு மிகு விருதுகள் வயோ நிறுவனத்தின் வலுமிகு பங்களிப்போடு வழங்கி வைக்கப்பட்டன. சமாதானத்தைக் கட்டியெழுப்ப பாடுபட்டமைக்கான தன்னார்வத் தொண்டர் விருதை ஹிலிர் மொஹமட் வென்றெடுத்தார். புற்றுநோய்க்கு எதிரான குழுவை 150 பல்வேறுபட்ட இன மத பின்னணி கொண்ட உறுப்பினர்களுடன் ஹிலிர் நிறுவி செயற்படுத்தி வருகின்றார். மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்குத் தேவையான PET Scanner என அறியப்படும் பாசிட்ரான் உமிழ்வு தளகதிர்படயியல் கருவியை பெற்றுக்கொடுப்பதற்கான நிதியை மூன்று மாதங்களில் சேகரிக்க ஹிலிர் பங்காற்றியுள்ளார். இதேவேளை, இளைஞர் தன்னார்வத் தொண்டர் விருதை திலீப் சதுரங்க வெற்றி கொண்டார். கல்வி மூலம் இளைஞர்களை வலுப்படுத்தியமைக்காக திலீப் சத்துரங்கவிற்கு இந்த விருது வழங்கப்பட்டது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலாளரான திலீப் சதுரங்க, வறிய பின்புலத்தைக் கொண்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பங்காற்றியுள்ளார். 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய தன்னார்வத் தொண்டருக்கான விருதை செல்விகா சகாதேவன் தனதாக்கிக் கொண்டார். விமோச்சனா இல்லம் என்ற இல்லத்தை 2011 ஆம் ஆண்டில் ஆரம்பித்த செல்விகா, அந்த இல்லத்தினூடாக போதைப்பொருள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றார். குறித்த இல்லத்தினூடாக 2011 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை 400 பேர் புனர்வாழ்வு சிகிச்சை பெற்றுள்ளதுடன், அதில் 70 வீதமானவர்கள் குணமடைந்துள்ளனர்.