இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2019 | 11:24 am

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவாகியுள்ளார்.

இதற்கான தேர்தல் இன்று காலை 10.30 மணியளவில், விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் ஷம்மி சில்வா, 83 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உப தலைவர்களாக ரவீன் விக்ரமரத்ன மற்றும் கே. மதிவாணன் ஆகியோரும் செயலாளராக மொஹான் டி சில்வாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

7 முக்கிய பதவிகளுக்காக 25 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலின்போது 142 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இந்தத் தடவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் அர்ஜூன ரணதுங்க தரப்பிலிருந்து தலைவர் பதவிக்காக ஜயந்த தர்மதாஸ வேட்புமனு தாக்கல் செய்ததுடன் சுமதிபால தரப்பில் மொஹான் டி சில்வா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

உபதலைவர் பதவிக்கு ரணதுங்க தரப்பில் அர்ஜூன ரணதுங்க, கே. மதிவானன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததுடன் சுமதிபால தரப்பில் ரவீன் விக்கிரமரத்ன, ஷம்மி சில்வா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

எனினும், சுமதிபால தரப்பின் மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்கிரமரத்ன ஆகியோரின் வேட்புமனுக்கள் மேன்முறையீட்டு குழு நிராகரித்ததுடன், அந்தத் தீர்மானத்துக்கு எதிராக எழுத்தாணை கோரி மொஹான் டி சில்வாவும் ரவீன் விக்கிரமரத்னவும் மேன்முறையீட்டு நீதிமன்றை நாடிச்சென்றனர்.

அந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், உபதலைவர் அல்லது உபசெயலாளர் பதவிக்கு ரவீன் விக்கிரமரத்னவும் செயலாளர் பதவிக்கு மொஹான் டி சில்வாவும் போட்டியிட சந்தர்ப்பமளிக்கும் இணக்கப்பாட்டுக்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்