by Bella Dalima 20-02-2019 | 7:06 PM
புல்வாமா தாக்குதலைக் கண்டித்து நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு கட்சி பேதமின்றி, பாராளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் உயிரிழந்த இந்திய இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு நியூசிலாந்து மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை (14) பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நியூசிலாந்தும் தற்போது கண்டனம் வௌியிட்டுள்ளது.
இதனிடையே, தமது நாட்டிற்கெதிராக இந்தியா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமானால் அதற்கு பதில் தாக்குல் மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டை முன்வைக்கும் முன்னர் ஆதாரங்கள் இருப்பின் வௌியிடுமாறும் அவர் இந்தியாவை வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், பங்கரவாதத்திற்கு தலைமை தாங்குவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டுமென பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
மேலும், தம்மிடம் சாட்சியங்களைக் கோர வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.