பீட்டா நிறுவனத்திடமிருந்து உத்தியோகப்பூர்வமான அறிக்கை கிடைக்கவில்லை: வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 20-02-2019 | 5:32 PM
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கை மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தியோகப்பூர்வமாகக் கிடைக்காமையால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான அறிக்கையொன்று இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் பீட்டா அனலைசிங் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட மாதிரிகளின் அறிக்கை இம்மாதம் 15 ஆம் திகதி தமக்குக் கிடைத்ததாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார். இந்த நிலையிலேயே, மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான அறிக்கையொன்றை சட்ட வைத்திய நிபுணர் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். எனினும், அமெரிக்காவின் பீட்டா நிறுவனத்திடமிருந்து உத்தியோகப்பூர்வமான அறிக்கை நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், சட்ட வைத்திய நிபுணர் ஒரு விண்ணப்பதாரி என்ற அடிப்படையில் அந்த அறிக்கையைப் பெற்றுள்ளதாக நீதவான் மன்றில் தெரிவித்தார். அதனை ஒரு உத்தியோகப்பூர்வமான அறிக்கையாக நீதிமன்றம் கருதவில்லை என நீதவான் இ.சரவணராஜா குறிப்பிட்டார். நீதிமன்றத்திற்கு அறிக்கை உத்தியோகப்பூர்வமாக கிடைப்பெற்ற பின்னர் அது தொடர்பில் நீதிமன்றம் அறிவிக்கும் என நீதவான் தெரிவித்தார். இதனையடுத்து, எதிர்வரும் 25ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர். புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவின் பீட்டா நிறுவனத்திற்கு அண்மையில் வழங்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மாதிரிகள் ஒப்படைக்கப்பட்டன. இதேவேளை, மன்னார் மனிதப் புதைகுழி காணப்படும் இடத்திற்கு மன்னார் நீதவான் இ.சரவணராஜா இன்று காலை சென்றிருந்தார். புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்று 147 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன. இதுவரையில் 314 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 28 மனித எச்சங்கள் சிறுவர்களுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.