இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நாளை நடைபெறுகிறது

by Staff Writer 20-02-2019 | 8:49 PM
Colombo (News 1st) திட்டமிட்டவாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை நாளை (21) நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக எழுத்தாணை கோரி ஒரு தரப்பினர் நீதிமன்றை நாடியதுடன், அது குறித்து இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது. இம்முறை இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் அர்ஜூன ரணதுங்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோரின் தரப்புகள் போட்டியிடத் தயாராகியுள்ளன. ரணதுங்க தரப்பிலிருந்து தலைவர் பதவிக்காக ஜயந்த தர்மதாஸ வேட்புமனு தாக்கல் செய்ததுடன், சுமதிபால தரப்பில் மொஹான் டி சில்வா வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். உப தலைவர் பதவிக்கு ரணதுங்க தரப்பில் அர்ஜூன ரணதுங்க, கே.மதிவானன் ஆகியோர் போட்டியிடுவதுடன், சுமதிபால தரப்பில் ரவீன் விக்ரமரத்ன, ஷம்மி டி சில்வா ஆகியோர் போட்டியிடுகின்றனர். எனினும், சுமதிபால தரப்பின் மொஹான் டி சில்வா மற்றும் ரவீன் விக்ரமரத்ன ஆகியோரின் வேட்புமனுக்களை மேன்முறையீட்டுக் குழு நிராகரித்தது. அந்தத் தீர்மானத்திற்கு எதிராக எழுத்தாணை கோரி மொஹான் டி சில்வாவும் ரவீன் விக்ரமரத்னவும் மேன்முறையீட்டு நீதிமன்றை நாடிச்சென்றதுடன், அவர்களின் மனுக்கள் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. உப தலைவர் அல்லது உப செயலாளர் பதவிக்கு ரவீன் விக்ரமரத்னவும் செயலாளர் பதவிக்கு மொஹான் டி சில்வாவும் போட்டியிட சந்தர்ப்பமளிக்கும் இணக்கப்பாட்டிற்கு இரண்டு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர். அதற்கமைய, மனு மீதான விசாரணையை எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைவரான நீதிபதி தீபாலி விஜேசுந்தர, நீதிபதி அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் தீர்மானித்தனர் நாளைய தேர்தலில் ரணதுங்க தரப்பில் ஜயந்த தர்மதாஸ உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளனர். சுமதிபால தரப்பில் தலைவர் பதவிக்காக ஷம்மி சில்வா போட்டியிடவுள்ளதுடன், உபதலைவர் பதவிக்காக ரவீன் விக்ரமரத்ன போட்டியிடவுள்ளார். தேர்தல் நாளை முற்பகல் 10.30 அளவில் நடைபெறவுள்ளது.