அக்கரப்பத்தனையில் காணாமற்போன 2 வயது குழந்தை மீட்பு

அக்கரப்பத்தனையில் காணாமற்போன 2 வயது குழந்தை மீட்பு

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2019 | 7:42 pm

Colombo (News 1st) அக்கரப்பத்தனையில் நேற்று (19) மாலை காணாமற்போன 2 வயது குழந்தை 18 மணித்தியாலங்களின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

ஹோல்ப்ரூக் – லோவர் கிரன்லி தோட்டத்திலுள்ள தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த யசிப் விதார்த் எனும் குழந்தை நேற்று மாலை 4 மணியளவில் காணாமற்போனது.

பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய, நேற்று மாலை முதல் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில், காணாமற்போன சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேயிலை மலையில் இன்று காலை தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, வீதியில் கைவிடப்பட்ட நிலையில் குழந்தை பிரதேச மக்களால் மீட்கப்பட்டுள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்