மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய இரதோற்சவம் இன்று

மாசி மகமான இன்று மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான இரதோற்சவம்

by Staff Writer 19-02-2019 | 7:12 AM
Colombo (News 1st) இந்துக்களால் கொண்டாடப்படும் கடலாடும் விழாவான மாசி மகம் இன்றாகும். மாசி மாதத்து பௌர்ணமியுடன் கூடிவரும் மகம் நட்சத்திர நன்நாளையே மாசிமகம் என புராணங்கள் கூறுகின்றன. இந்தநிலையில், மலையகத்தின் குடும்ப விழா ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மகோற்சவத்தின் பஞ்ச இரதோற்சவப் பெருவிழா தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. இலங்கையின் சக்தி தலங்களில் சிறப்பிடம் பெறுகின்ற மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மகோற்சவ பெருவிழா முக்கிய நிகழ்வான இரதோட்சவ பெருவிழா இன்று (19) நடைபெற்றது. மாத்தளை ஶ்ரீ முத்துமாரியம்பாள் உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு இன்று காலை விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன. பிராமண உத்தமர்களின் வேத மந்திர உச்சாடனத்துடன் நடைபெற்ற வசந்த மண்டப பூஜைகளில் பெருந்திரளான பக்கதர்கள் கலந்துகொண்டிருந்தனர். அதனையடுத்து, மங்கள வாத்தியங்களில் முழக்கத்துடன் பக்தர்களின் அரகர கோசங்களிற்கு மத்தியில் உற்சவ மூர்த்திகளின் உள்வீதி மற்றும் வௌிவீதி வலம் இடம்பெற்றன. விநாயகர், முருகப்பெருமான், சிவன் பார்வதி, முத்துமாரியம்மாள், சண்டேஸ்வரி உள்ளிட்ட பஞ்ச இரதங்களில் ஆரோகணிக்கப்பட்டதன் பின்னர் இரதோற்சவ பெருவிழா இனிதே ஆரம்பமானது. இதேவேளை, மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசிமக மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் நியூஸ்பெஸ்ட்டின் விசேட கலையகம் நேற்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இன்றும் நாளையும் குரல்தேர்வு மற்றும் திரைப்பரீட்சை இடம்பெறவுள்ளதுடன், தெரிவுசெய்யப்படும் திறமைசாலிகளுக்கு நேரடியாக செய்தி வாசிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.