மாகந்துரே மதுஷின் உதவியாளர் வெடிகந்தே கசுன் கைது

மாகந்துரே மதுஷின் உதவியாளர் எனப்படும் வெடிகந்தே கசுன் கைது

by Staff Writer 19-02-2019 | 6:46 PM
Colombo (News 1st) மாகந்துரே மதுஷின் உதவியாளர் என கூறப்படும் 'வெடிகந்தே கசுன்' என அழைக்கப்படும் கசுன் தனஞ்சய (31) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொட - வெடிகந்த பகுதியில் மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகள் என தெரிவித்து மஹரகம பகுதி வீடொன்றினுள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை துப்பாக்கியால் தாக்கி மாணிக்கக்கல் மற்றும் இரத்தினக்கற்களை கொள்ளையிட்டுச் சென்றமை தொடர்பில் வெடிகந்தே கசுன் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, மாணிக்கக்கற்களை கொள்வனவு செய்ய வருகை தந்த வௌிநாட்டவரை, கைவிலங்கிட்டு அழைத்துச் சென்று மஹரகம பகுதியில் வைத்து விடுவித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய வெடிகந்தே கசுன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நாளை (20) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பிற்காக ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.