தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்

by Staff Writer 19-02-2019 | 5:26 PM
Colombo (News 1st) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற பொது நிர்வாக அலுவலரான திலக் கொல்லுரே பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவையினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற பொது நிர்வாக அலுவலரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன, அஷோக்க விஜேதிலக்க உள்ளிட்ட மூவர் பெயரிடப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அனுமதிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நியமிக்கப்பட்டது. மூன்று வருடங்கள் பதவிக்காலத்தைக் கொண்ட ஆணைக்குழுவின் பதவிக்காலம் 2018 நவம்பர் மாதம் 14 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கிணங்க, உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரையும் ஆணைக்குழு முடக்கப்படவில்லை. இதற்கிணங்க ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுபவர் சீ.எச்.மனதுங்க என்பவராவார். இதனிடையே, ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்ட சீ.எச்.மனதுங்க, முன்னாள் பொலிஸ் மா அதிபரான ப்ரேன்க் டி சில்வா, அன்டன் ஜெகநாதன் உள்ளிட்ட உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவையினால் நீக்கப்பட்டுள்ளனர். புதிய தலைவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள திலக் கொல்லுரே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக இதற்கு முன்னர் செயற்பட்டிருந்தார். இதற்கு மேலதிகமாக பேராசிரியர் சிறி ஹெட்டிகே, சாவித்திரி விஜேசேகர உள்ளிட்ட உறுப்பினர்களின் பதவிக்காலத்தை மேலும் மூன்று வருடங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியலமைப்பு பேரவை தெரிவித்துள்ளது.