இறுதி கடன் தவணை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் கலந்துரையாடல் 

by Staff Writer 19-02-2019 | 8:13 PM
Colombo (News 1st) சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் நேற்று (18) நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இறுதி கடன் தவணை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சிலர் நிதி அமைச்சரை சந்தித்ததாக சிலோன் FT பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி , திறைசேரியின் செயலாளர் கலாநிதி எஸ்.எஸ்.சமரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட மூன்று வருட கடன் திட்டத்தின் கீழ் இதுவரை நான்கு தவணைகளில் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும், கடன் திட்டத்தின் இறுதி தவணைக்கான கொடுப்பனவு கடந்த நவம்பர் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நிலையில், நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை காரணமாக அதனை நிறுத்தியிருந்தனர். எவ்வாறாயினும், கடந்த ஜனவரி மாதம் நிதி அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் சர்வதேச முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லகார்டுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் கடனை மீண்டும் வழங்குவதற்கு சமிஞ்சை வெளியானது. இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பெப்ரவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் பிரகாரம், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சிலோன் FT செய்தி வௌியிட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் வறிய மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தாமல், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி யுவான் பெப்லோவை மேற்கோள் காட்டி ''த ஐலன்ட்'' பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் விலை சூத்திர முறையானது விவசாயிகள் மற்றும் மீனவர்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ள சந்தர்ப்பத்தில் உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் கலாநிதி Hartwig Schafer மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு கடந்த வௌ்ளிக்கிழமை நாட்டிற்கு வருகை தந்திருந்தார். இந்த விஜயத்தின் நிறைவில் அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய வங்கி ஆளுனர் உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். இதேவேளை, இலங்கையில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. GSP + வரிச்சலுகையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதாக இருந்தால், மனித உரிமைகள், விவசாயிகளின் உரிமைகள், சுற்றாடல் மற்றும் அரசியல் உள்ளிட்டவை தொடர்பான 27 சரத்துக்களுக்கு மதிப்பளிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.