இந்தியாவிற்கு இம்ரான் கான் எச்சரிக்கை

இந்தியா இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் பதிலுக்கு தாக்குவோம்: இம்ரான் கான் எச்சரிக்கை

by Bella Dalima 19-02-2019 | 7:36 PM
Colombo (News 1st) தமது நாட்டிற்கெதிராக இந்தியா இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுமானால், அதற்கு பதில் தாக்குல் மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு மக்கள் தீவிரவாதத்திற்கு உதவுவதாகவும், அதற்கு பதிலளிக்கப்படும் எனவும் அண்மையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் வகையில் இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆம் திகதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான உறவு மேலும் விரிசலுக்கு உள்ளாகியுள்ளது. காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் திகதி இந்திய இராணுவத்தின் ட்ரக் வண்டியொன்றை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் ஜெய்ஷ் இ மொஹம்மட் தீவிரவாதக் குழு உரிமை கோரியது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான காஷி ரஷீட் என்பவர் 12 மணித்தியால ​தொடர் கூட்டுத் தேடுதலில் நேற்று (18) கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. சர்வதேசத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கக்கூடிய அயல் நாடு, பயங்கரவாதத்தை பயன்படுத்தி நாட்டை அழிவுக்கு உட்படுத்த முயற்சிப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை மக்கள் பேரணியொன்றில் உரையாற்றிய போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதிலளித்துள்ளார். பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு உதவுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார். எதிர்வரும் மே மாதத்தில் இந்தியாவில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பிரதமர் தீவிரவாதத்திற்கு எதிராக பலமான மற்றும் கடுமையான பதிலை வழங்க இராணுவத்திற்கு பூரண சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிள்ளைகள் போராளிகளாயின் அவர்களை உடனடியாக சரணடையச் செய்யுமாறு தாய்மாரைக் கோருவதாக காஷ்மீரின் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். டிலோன் தெரிவித்தார். அவ்வாறு அவர்கள் சரணடையாவிடின், அவர்கள் உயிரிழந்துவிட்டதாகக் கருதுமாறு அவர் தெரிவித்துள்ளார்.