பாகிஸ்தான் - சவுதி இடையே உடன்படிக்கை கைச்சாத்து

பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே உடன்படிக்கை கைச்சாத்து

by Staff Writer 18-02-2019 | 7:38 PM
Colombo (News 1st) பாகிஸ்தானுடன் 20 பில்லியன் டொலர் பெறுமதியான உடன்படிக்கையில் சவுதி அரேபியா கைச்சாத்திட்டுள்ளது. ஆசிய நாடுகளிற்கான விஜயத்தினை ஆரம்பித்து, பாகிஸ்தானைச் சென்றடைந்துள்ள சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசரின் வருகையின் ஒருபகுதியாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில், க்வடார் (Gwadar) நகரில் எண்ணெய் சுத்திகரிப்பதற்காக 8 பில்லியன் டொலர் நிதியுதவியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானிடம் 8 பில்லியன் டொலர் வெளிநாட்டு ஒதுக்கீடுகள் மாத்திரமே காணப்படுவதுடன், அதிலிருந்து மீள்வதற்காக சர்வதேச உதவிகளை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், நட்புறவு நாடுகளிடமிருந்து, பணவுதவிகளை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் கோரியிருந்தார். இந்தநிலையில், பாகிஸ்தானுக்குச் சென்ற சவுதி இளவரசரை, பாகிஸ்தானின் வழக்கமான அரச நடைமுறைகளைத் தவிர்த்து, தனது காரிலேயே பிரதமர் இம்ரான் கான் அழைத்து வந்திருந்ததுடன் காரையும் அவரே செலுத்தியுள்ளார். மேலும், சவுதியில் பணியாற்றும் 25 இலட்சம் பாகிஸ்தானியர்களின் சார்பாக வைத்த கோரிக்கையை சவுதி இளவரசர் ஏற்றுக்கொண்டு, பாகிஸ்தான் மக்களின் மனங்களை வென்றுவிட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.