விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

தென் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

by Staff Writer 18-02-2019 | 9:14 PM
Colombo (News 1st) இரத்தினபுரி பகுதியில் இருவர் காணாமல்போனமை தொடர்பில், தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் பொலிஸ் இன்ஸ்பெக்டர் கபில நிஷாந்த டி சில்வா குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுள அசேல மற்றும் ரஜீன் ஷிந்தக ஆகிய வர்த்தகர்கள் இருவர் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர். மஞ்சுள அசேலவின் வீட்டிலிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த வர்த்தகர்கள் இருவரும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். உத்தியோகபூர்வ பொலிஸ் ஆடையில் வருகைதந்தவர்கள் துப்பாக்கி முனையில் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றதாக, அவரின் குடும்பத்தின் தொடர்ச்சியாக குற்றஞ்சுமத்தி வந்தனர். இந்தநிலையில், தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் உள்ள விசேட பிரிவினரால் குறித்த வர்த்தகர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டதாக, கடந்த வாரத்தில் அவர்களின் வீட்டுக்கு கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, பொலிஸாரின் தாக்குதலில் ஒரு வர்த்தகர் உயிரிழந்ததாகவும் மற்றைய வர்த்தகர் அதை பார்த்ததால் அவரையும் கொலை செய்ததாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வர்த்தகர்களைக் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் காலி மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் உடுகம கொனாமுல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது காலியில் நாம் நடத்திய தேடுதலில் குறித்த வர்த்தகர்கள் இருவரையும் கடத்துவதற்காக வேன் மற்றும் காரில் குறித்த தரப்பினர் வருகை தந்துள்ளமை தெரியவந்தது. ரத்கம பகுதியிலுள்ள வீதியொன்றில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.ரி.வி. கெமராவில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் பதிவாகியுள்ளது. எனினும், அந்த வீதியில் குறித்த வேன் மீண்டும் பயணிக்கவில்லை. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனுக்கும் சீ.சீ.ரி.வி, காட்சிகளில் பதிவாகியுள்ள வேனுக்கும் அதிக ஒற்றுமைகள் காணப்படுகின்றன. குறித்த வேனின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படுபவர் அனுர என அழைக்கப்படும் வர்த்தகராவார். இதனிடையே, பொலிஸாருடன் நெருங்கிய உறவை பேணிய சுட்டே என அழைக்கப்படும் ஒருவரின் வீட்டுக்கு அருகாமையில் குறித்த வர்த்தகர்கள் கடத்தப்பட்ட தினம் அதிகாலை அதிக நேரம் தரித்திருந்த காட்சிகளும் சீ.சீ.ரி.வி. கெமராவில் பதிவாகியுள்ளது. இதனிடையே, தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட உதவி பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தன கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்