ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் ஆய்வு

ட்ரம்ப்பை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் செனட்சபை

by Staff Writer 18-02-2019 | 7:27 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பில், அந்நாட்டு செனட்சபை உறுப்பினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ட்ரம்பை பதவியிலிருந்து அகற்றுவதற்கான வழிவகைகள் குறித்து, அமெரிக்க புலனாய்வுப் பிரிவு மற்றும் நீதித்திணைக்களத்தின் உயரதிகாரிகள் கலந்தாலோசித்துள்ளனர். இவற்றினடிப்படையில், ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யுமாறு, செனட்சபையின் நீதிக்குழுத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அந்தப் பதவிக்குத் தகுதியற்றவராகக் காணப்படும் பட்சத்தில், அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதனை அரசியலமைப்பின் உறுப்புரைகள் அனுமதிப்பதாக, 2017 ஆம் ஆண்டில் அந்நாட்டு துணை சட்டமா அதிபர் ரொட் ரொசென்ஸ்ரைன் (Rod Rosenstein) தெரிவித்ததாக, அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இடைக்காலத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், குறித்த உறுப்புரையை வலிதாக்கி, 25ஆவது அரசியலமைப்புத் திருத்தமாகக் கொண்டுவருவதற்கு எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது தொடர்பில் ரொட் ரொசென்ஸ்ரைன் (Rod Rosenstein) கலந்துரையாடியுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதியை விசாரணை செய்வதற்குத் தேவையான காரணங்கள் அமெரிக்க புலனாய்வுப் பிரிவிற்குக் காணப்படுவதாக அதன் முன்னாள் இடைக்காலத் தலைவர் அன்ட்ரூ மக்கபே கூறியுள்ளார். இந்தநிலையில், அரசாங்க விசாரணையாளர்களுக்கு பொய் கூறியதாகத் தெரிவித்து அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் இடைக்காலத் தலைவர் பதவியிலிருந்து அன்ட்ரூ மக்கபே நீக்கப்பட்டதாக வௌ்ளைமாளிகை குறிப்பிட்டுள்ளது.