மன்னார் மனிதப் புதைகுழி எச்சங்கள் தொடர்பான ஆய்வறிக்கை நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளது 

by Staff Writer 16-02-2019 | 4:04 PM
Colombo (News 1st) மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் எந்தக் காலப்பகுதிக்கு உரியவை என்பதை உறுதிப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பீட்டா அனலைசிங் நிறுவனத்திடம் வழங்கப்பட்ட மாதிரிகளின் அறிக்கை நேற்றிரவு கிடைத்ததாக மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். கார்பன் பரிசோதனைக்காக வழங்கப்பட்ட 6 மாதிரிகளில் 5 மாதிரிகளின் அறிக்கையே கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த அறிக்கையை எதிர்வரும் புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார். மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களில் தெரிவு செய்யப்பட்ட 6 மாதிரிகள் மேலதிக ஆய்வுகளுக்காக அமெரிக்காவிற்கு எடுத்துச்செல்லப்பட்டன. தொடை எலும்பு மற்றும் பற்களின் மாதிரிகளே ஆய்வுகளுக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தன. மன்னார் மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் நேற்று 146 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன. இதுவரையில் 314 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 28 மனித எச்சங்கள் சிறார்களுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.