தர்மலிங்கம் பிரதாபனின் பயணம் தொடர்கிறது

தேநீர் அருந்தும் ஒவ்வொருவரும் தோட்டத்தொழிலாளர்களின் துயரைத் துடைக்க முன்வர வேண்டும்

by Bella Dalima 16-02-2019 | 8:40 PM
Colombo (News 1st) வவுனியாவைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்துள்ள துவிச்சக்கரவண்டிப் பயணத்தை இன்று புத்தளத்தில் இருந்து ஆரம்பித்தார். சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் புத்தளம் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாகவிருந்து பிரதாபன் தனது இன்றைய பயணத்தை ஆரம்பித்தார்.
இந்நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் தோட்டத்தொழிலாளர்களும் மனிதர்களே. மழையிலும் பனியிலும் குளிரிலும் நனைந்து நிம்மதியிழந்து, சொல்ல முடியாத பல துன்பங்களோடு லயன்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறது. இன்று நாட்டில் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துள்ளதால், அவர்களுடைய சம்பளத்தை அதிகரித்துக்கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. தேநீர் அருந்தும் ஒவ்வொருவரும் தோட்டத்தொழிலாளர்களின் துயரத்தைத் துடைக்க முன்வர வேண்டும்.
என தர்மலிங்கம் பிரதாபன் கோரிக்கை விடுத்தார். வவுனியா - கோவில்குளம், சிவன் கோவிலிலிருந்து தர்மலிங்கம் பிரதாபன் கடந்த 10 ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்தார். தர்மலிங்கம் பிரதாபன், 2154 கிலோமீட்டர் தூரம் துவிச்சக்கரவண்டியில் பயணிக்கவுள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா அடிப்படைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும், லயன் அறைகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும், யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் எனும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவர் இந்தப் பயணத்தை முன்னெடுத்துள்ளார்.