தென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை வெற்றி

குசல் ஜனித் பெரேராவின் அபார துடுப்பாட்டத்தால் இலங்கை வெற்றி

by Staff Writer 16-02-2019 | 7:06 PM
Colombo (News 1st) குசல் ஜனித் பெரேராவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 1 விக்கெட்டால் வெற்றியீட்டியது. இறுதி வரை நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். டேர்பனில் நடைபெறும் இந்தப் போட்டியில் தென்னாபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 235 ஓட்டங்களையும் இலங்கை அணி 191 ஓட்டங்களையும் பெற்றன. 44 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்​ஸைத் தொடர்ந்த தென்னாபிரிக்கா 295 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. இதன்படி, போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 304 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. 3 விக்கெட் இழப்பிற்கு 83 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. குசல் ஜனித் பெரேரா 12 ஓட்டங்களுடனும் ஓசத பெர்ணானாண்டோ 28 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். குசல் ஜனித் பெரேரா மற்றும் தனஞ்சய டி சில்வா ஜோடி ஆறாவது விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியீட்டும் நம்பிக்கையை உருவாக்கியது. தனஞ்சய டி சில்வா துரதிர்ஷ்டவசமாக 48 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் கேஷவ் மஹாராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பொறுமையாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா டெஸ்ட் அரங்கில் இரண்டாவது சதத்தை எட்டினார். இதன் மூலம் தென்னாபிரிக்க மண்ணில் நான்காம் இன்னிங்ஸில் சதமடித்த நான்காவது ஆசிய வீரராகப் பதிவானார். தென்னாபிரிக்க மண்ணில் சதமடித்த நான்காவது இலங்கை வீரரும் குசல் ஜனித் பெரேரா என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டாலும் ஒன்பதாவது விக்கெட்டில் குசல் ஜனித் பெரேரா மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஜோடி 78 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 5 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகளுடன் 153 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.