தமிழ் மக்களுடன் சண்டையிட எனக்கு காரணங்கள் இல்லை: கிளிநொச்சியில் பிரதமர் தெரிவிப்பு

தமிழ் மக்களுடன் சண்டையிட எனக்கு காரணங்கள் இல்லை: கிளிநொச்சியில் பிரதமர் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2019 | 8:34 pm

Colombo (News 1st) கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.

வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார்.

1974 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

யுத்தத்தின் போது வட பகுதியிலேயே அதிக அழிவுகள் ஏற்பட்டன. நாடும் இல்லாமற்போனது. அனைத்து பகுதிகளிலும் மக்கள் உயிரிழந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவரும் பொதுச்செயலாளரும் உயிரிழந்தனர். எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உயிரிழந்தார். லலித் அத்துலத்முதலி உயிரிழந்தார். கட்சியிலுள்ள அனைவரும் குண்டு வீச்சில் இறந்த பின்னரே நான் தலைவரானேன். அது கடந்த காலம். அதனால் தமிழ் மக்களுடன் எனக்கு சண்டையிடுவதற்கு காரணங்கள் இல்லை. சில விடயங்கள் தொடர்பில் வழக்குகள் காணப்படுகின்றன. LTTE யினர் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தினர் பொலிஸார் மீதும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரே இவை இடம்பெற்றன. அந்த அரசாங்கமே செயற்பட்டது. அந்த வழக்குகள் தொடர்பில் சாட்சியங்கள் காணப்பட்டமையால் நாம் முன்னோக்கி கொண்டு சென்றோம். தற்போது வழக்குகளை தாக்கல் செய்த வண்ணம் இருக்க முடியாது. நல்லிணக்கம் ஏற்பட வேண்டும். நாம் உண்மையைப் பேசி, வருத்தத்தைத் தெரிவித்து, மன்னிப்புக் கோரி பல விடயங்களை நிறைவு செய்ய வேண்டும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்