by Staff Writer 15-02-2019 | 3:33 PM
Colombo (News 1st) ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் இரண்டு முறைப்பாடுகளை முதற்கட்டமாக விசாரணை செய்யவுள்ளதாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் மின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக கடந்த காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடு மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த முறைப்பாடுகள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் பொது சொத்துக்களை பாதுகாக்கும் அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து நேற்றைய தினம் (14) ஆணைக்குழு உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர், விசேட பயிற்சிகளைப் பெற்றுள்ள குற்றப்புலனாய்வு அதிகாரிகளையும் பொலிஸ் அதிகாரிகளையும் விசாரணைகளுக்காக வழங்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையிலான விசேட விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.
கடந்த 04 வருடங்களாக அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலான சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை 49 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2015 ஜனவரி 14 முதல் 2018 ஆம் ஆண்டின் டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதே இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும்.
எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.