விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு

விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு

by Staff Writer 14-02-2019 | 8:43 AM
Colombo (News 1st) கடந்த காலங்களில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு அவதானம் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். முப்படையினர், பொலிஸார் உடன் சுகாதார அமைச்சின் 700ற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிடுகின்றார். தற்போது டெங்கு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் மேல் மாகாணம் உட்பட யாழ்ப்பாணத்தில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இன்றும் நாளையும் முன்னெடுத்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர நியூஸ்பெஸ்டுக்குத் தெரிவித்துள்ளார். பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் மதவழிபாட்டுத் தலங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிடுகின்றார். வீடுகளில் டெங்குக் குடம்பிகள் பரவுவதற்கு ஏதுவாகக் காணப்படும் பகுதிகளை அழித்து டெங்கு பரவுகையைக் கட்டுப்படுத்த உதவுமாறும் பொதுமக்களை தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார். இதேவேளை, இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் காணப்படுமாயின் வைத்தியசாலைக்கு சென்று டெங்கு நோய் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் நோயாளர்களை தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏனைய செய்திகள்