ரீயூனியனிலுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு...

ரீயூனியன் தீவிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

by Staff Writer 14-02-2019 | 7:38 AM
Colombo (News 1st) சட்டவிரோதமாக ரீயூனியன் தீவுக்குச் சென்ற நிலையில் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 70 பேரையும் இன்று நாட்டிற்கு திருப்பியனுப்புவதற்கு, பிரான்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். விசேட விமானம் மூலம் இவர்கள் அனைவரும் இன்று நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவி விசாரணை பணிப்பாளர் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸின் விசேட விமானத்தினூடாக இவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற படகொன்று காணாமல் போயுள்ளதாக படகின் உரிமையாளர் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்திருந்தார். வே - பிரஷங்சா எனப்படும் நீண்ட நாள் மீன்பிடி படகொன்றே இவ்வாறு காணாமல் போயிருந்தது. அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் படகோட்டியாக செயற்பட்ட நபர், குறித்த 70 பேரிடமும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபா வரை அறவிட்டு பிரான்ஸின் ரீயூனியன் தீவு வரை அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் படகிலிருந்தவர்கள், கடந்த 5 ஆம் திகதி ரீயூனியன் தீவைச் சென்றடைந்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கண்டி, புத்தளம், அம்பாறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 70 பேர், மடகஸ்காருக்கு 175 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ரீ யூனியன் தீவுக்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு சென்றவர்களுள் 5 சிறு பிள்ளைகள் மற்றும் 8 பெண்கள் அடங்குவதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களம் தெரிவித்துள்ளது.