விபத்திற்குள்ளான காரிலிருந்து கேரளக்கஞ்சா மீட்பு

மருதானையில் விபத்திற்குள்ளான காரிலிருந்து கேரளக்கஞ்சா மீட்பு

by Staff Writer 14-02-2019 | 12:07 PM
Colombo (News 1st) மருதானை ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள மேம்பாலத்தில் மோதி விபத்திற்குள்ளான காரிலிருந்து கேரளக்கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த காரிலிருந்து 68 கிலோகிராம் கேரளக்கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (14) அதிகாலை 3.30 மணி தொடக்கம் 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த கார் வண்டி மேம்பாலத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றபோது, காரில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இவ்வாறு தப்பிச்சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு சம்பவ இடத்தில் காணப்படும் சீ.சீ.ரி.வி. கெமராக்களை சோதனை இடவுள்ளதாக அவர் கூறினார். அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, வருடத்தின் கடந்த 42 நாட்களில் மாத்திரம் போதைப்பொருளுடன் 10,368 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 1,310 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 12 ஆம் திகதி வரை மாத்திரம் 5,222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 224 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பலர் பாதாள உலகக் கோஷ்டியுடன் தொடர்புபட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். இவ்வாறு கைதான சந்தேகநபர்களில் 9 பேர் வௌிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.