பிரதமர் மீது இராஜாங்க அமைச்சர் விஜயகலா அதிருப்தி

by Bella Dalima 14-02-2019 | 8:28 PM
Colombo (News 1st) யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு இன்று கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டது. இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர். வட மாகாணத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அனல் தீவு, நயினா தீவு , எழுவை தீவு போன்ற தீவுகளில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை என இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்தார். குறித்த தீவுகளுக்கு சேவையாற்ற மருத்துவர்கள் எவரும் செல்ல சம்மதிப்பதில்லை என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார். மேலதிக கொடுப்பனவுகள் அல்லது விசேட சலுகைகளை வழங்கினால் மருத்துவர்கள் அங்கு செல்ல முன்வருவார்கள் என எஸ். ஸ்ரீதரன் குறிப்பிட்டார். எனினும், அத்தீவுகளுக்கு படகு அம்பியூலன்ஸ் திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். இதேவேளை, வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு சரியான முறையில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார். வடக்கின் பாடசாலைகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யவே விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சராக நியமித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.