திருட்டு வழியில் ஊடக ஒழிப்பு செயற்பாடு முன்னெடுப்பு

by Staff Writer 14-02-2019 | 8:21 PM
Colombo (News 1st) ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசியல் தரப்பு மேற்கொள்ளும் முயற்சி இன்னமும் கைவிடப்பட்டதாகத் தெரியவில்லை. 2017 ஆம் ஆண்டு செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீன பேரவை சட்டம் எனும் பெயரில் ஆவணமொன்றைத் தயாரித்து ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு முயன்ற குழு தற்போது வேறொரு வழிமுறையின் கீழ் அந்த இலக்கை அடைவதற்கு முயல்கின்றது. அரச ஊடகங்களை மக்கள் சேவை ஊடக நிறுவனங்களாக மாற்றுவதாகத் தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர குழுவொன்றை நியமித்தார். தனியார் ஊடகங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக அரச ஊடக நிறுவனங்களை உண்மையான மக்கள் சேவை ஊடகங்களாக மாற்ற வேண்டும் என இந்தக் குழுவிற்கான உறுப்பினர்களை நியமித்த போது அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தார். இந்த குழுவின் தலைவராக விஜயானந்த ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். கலாநிதி பிரதீப் வீரசிங்க, நாலக்க குணவர்தன, கௌசல்யா பெர்னாண்டோ, பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, அனோமா ராஜகருணாநாயக்க மற்றும் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோரையும் அமைச்சர் மங்கள சமரவீர குறித்த குழுவிற்காக நியமித்திருந்தார். மங்கள சமரவீர வெகுசன ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர், வெகுசன ஊடகங்களை மறுசீரமைப்பதற்கான தேசிய செயலகம் எனும் பெயரில் அரச சார்பற்ற நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்பட்டது. வெகுசன ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் தண்டனை விதிப்பதற்கும் ஏதுவான சட்டங்களை உள்ளடக்க வேண்டும் என தெரிவித்து சுயாதீன பேரவை சட்டம் எனும் ஆவணத்தை இந்த அரச சார்பற்ற நிறுவனமே தயாரித்திருந்தது. அரச ஊடகங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவரான விஜயானந்த ஜயவீர இந்த அரச சார்பற்ற நிறுவனம் முன்வைத்த ஆவணத்தையும் தயாரித்திருந்தார். கலாநிதி பிரதீப் வீரசிங்க மற்றும் நாலக்க குணவர்தன ஆகிய இருவரும் அரச சார்பற்ற நிறுவனத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களாக உள்ளனர். இந்த அரச சார்பற்ற நிறுவனம் தனித்து செயற்படவில்லை என்பதுடன், அவர்கள் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றையும் தொடர்புபடுத்திக்கொண்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அண்மையில் ஊடகங்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் ஊடக நிறுவனங்களுக்கு முன்பாக முகங்களை மறைத்துக்கொண்டு அச்சுறுத்தல் விடுத்த அரச சார்பற்ற நிறுவன குழுவின் முக்கிய செயற்பாட்டாளராகக் காணப்பட்ட கௌசல்யா பெர்னாண்டோ ஊடகங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மங்கள சமரவீர நியமித்த குழுவிலும் அங்கம் வகிக்கின்றார். இந்தக் குழுவே டொலர்களுக்காக கூச்சலிடும் அரச சார்பற்ற நிறுவனங்களை வழிநடத்துவதாக அன்று நியூஸ்ஃபெஸ்ட் அம்பலப்படுத்திய விடயம் இன்று உறுதியாகியுள்ளதுடன், அவர்களின் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்பதும் தற்போது வௌிக்கொணரப்பட்டுள்ளது. ஊடகங்களை ஒடுக்குவதற்கான யோசனைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட செய்தி ஊடக தர நிர்ணயங்களுக்கான சுயாதீன பேரவை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது வேறு வழிமுறையை பின்பற்றி அதிலுள்ள விடயங்களை சட்டமாக்குவதற்கு இந்தக் கும்பல் முயல்கின்றது. ஊடக நிறுவனங்களுக்கு முன்பாக முகங்களை மறைத்துக்கொண்டு விடுத்த அச்சுறுத்தல்கள் மற்றும் அரச ஊடக நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குழு நியமிக்கப்பட்டமை என்பன வெறும் சம்பவங்கள் அன்றி திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்படும் ஒரு செயற்பாட்டின் அங்கமாகும். இதன் பின்னணியில் பெருந்தொகை டொலர்கள் பரிமாறப்படுகின்றனவா? இவற்றுடன் தொடர்புபட்டவர்களுக்கு வேறு அனுகூலங்கள் கிடைக்கின்றனவா? ரங்க கலன்சூரிய என்பவர் சில காலம் அரச செய்தி பணிப்பாளர் நாயகமாக அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு உபாயங்களை பயன்படுத்தி ஊடகங்களை ஒடுக்குவதற்கு முயற்சித்திருந்தாலும், அந்த சந்தர்ப்பத்தில் அம்முயற்சிகள் கைகூடவில்லை. பின்னர் பதவியில் இருந்து ஒதுங்கிக்கொண்டதாக காண்பிக்க முயன்று அவர் திரைக்கு பின்னால் வேறு வழிமுறைகளின் கீழ் அந்த இலக்குகளை அடைய முயற்சித்து வருகின்றார். ஊழல் மோசடிக்கு எதிராக குரல் கொடுக்கும் ஊடகங்களை மௌனிக்கச் செய்வது அல்லது தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதே இவர்களது இறுதி இலக்காகும். ஆட்சிக்கு வந்து சில வாரங்களுக்குள் மத்திய வங்கியை சூரையாடிய இந்த கும்பல் மக்கள் தொடர்பில் சற்றும் சிந்திக்காமல் ஒரு வருடம் கடப்பதற்கு முன்னர் மீண்டும் மத்திய வங்கியை சூரையாடினர். நாட்டின் தொழிலாளர் வர்க்கத்திற்காக ஒதுக்கப்பட்ட ஒரே ஒரு நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தையும் சூரையாடிய இந்தக் கும்பல், 30 வருடங்களுக்கு நாட்டு மக்கள் துன்பத்தை அனுபவிப்பதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. தமது திருட்டுக்கள் மற்றும் மோசடிகளை வௌிக்கொணரும் ஊடக நிறுவனங்களே, முறிகள் திருடர்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்திப்பதற்குள்ள மிகப்பெரிய சவாலாகும். திருட்டுக்களை மறைப்பதற்காகவா பல்வேறு வழிமுறைகளின் கீழ் ஊடகங்களை ஒடுக்குவதற்கு இந்த கும்பல் முயல்கின்றது?