தரமான தூக்குக்கயிற்றைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

தரமான தூக்குக்கயிற்றைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

by Staff Writer 14-02-2019 | 7:53 AM
Colombo (News 1st) வௌிநாட்டிலிருந்து தரமான புதிய தூக்குக்கயிறைக் கொள்வனவு செய்வதற்கு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தூக்குமேடைக்குப் பயன்படுத்தப்படும் கயிற்றின் தரம் தொடர்பில் சிக்கல் காணப்படுதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, சிங்கப்பூர், மலேஷியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து புதிய தூக்குக் கயிற்றை கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, வௌிவிவகார அமைச்சிடம் அறிவித்துள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சு கூறியுள்ளது. மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கான தண்டனையை அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானங்களை செயற்படுத்தும நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 1,242 பேரில் 806 பேர் மேன்முறையீடு செய்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் 25 பேர் பாரதூரமான விதத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 30 சிறைச்சாலைகள் காணப்படுகின்றபோதிலும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான வசதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் மாத்திரமே காணப்படுகின்றன. இதேவேளை, தூக்குமேடைக்குத் தேவையான ஏனைய உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மரணதண்டனையை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, தற்போது அலுக்கோசு பதவிக்காகக் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை அனுப்பிவைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தூக்குக்கயிறு, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.