கேரளக்கஞ்சாவுடன் விபத்திற்குள்ளான SUV வாகன உரிமையாளரின் சகோதரர் கைது

by Bella Dalima 14-02-2019 | 9:08 PM
Colombo (News 1st) மருதானை பாலத்திற்கு அருகில் கேரளக்கஞ்சாவுடன் விபத்திற்குள்ளான SUV வாகனத்தின் உரிமையாளரின் சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தின் பின்னர் வாகனத்தை செலுத்திய நபர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மருதானை பொலிஸ் நிலையத்திற்கு வாகனம் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், நடைபாதையில் மோதியமையால் முன்பக்க டயர் சேதமடைந்துள்ளது. அந்த வாகனத்தில் இருந்து 68 கிலோகிராம் கேரளக்கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் அவற்றை ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த வாகனத்தின் உரிமையாளரான பெண் மத்திய கிழக்கில் சேவையாற்ற வருகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பம்பலப்பிட்டியவிலுள்ள ஹோட்டலொன்றுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதுடன், வாகனத்தின் பொறுப்பாளரே கைது செய்யப்பட்டுள்ளார். வாடகை அடிப்படையில் இந்த வாகனத்தை பெற்றுக்கொண்ட நபர்கள் கேரளக்கஞ்சாவை கொண்டு செல்வதற்காக வாகனத்தை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.