மின்தூக்கி குறித்த தரமதிப்பீட்டு அறிக்கை கையளிப்பு

பாராளுமன்ற மின்தூக்கி குறித்த தரமதிப்பீட்டு அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

by Staff Writer 13-02-2019 | 1:01 PM
Colombo (News 1st) பாராளுமன்ற மின்தூக்கிகள் தொடர்பிலான தரமதிப்பீட்டு அறிக்கை இன்று (13) சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது. பாராளுமன்றத்தில் மின்தூக்கியை செயற்படுத்திய நிறுவனத்தினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் கடந்த சில நாட்களாக ஆய்வுகளை முன்னெடுத்திருந்ததாக, பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியினுள் 10 மின்தூக்கிகள் செயற்பாட்டில் உள்ளதுடன் அவற்றில் இரண்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் மின்தூக்கி செயலிழந்தமையால், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சுமார் 20 நிமிடங்கள் மின்தூக்கிக்குள் அகப்பட்டனர். இதனையடுத்து, மின்தூக்கி செயலிழந்தமைக்கான காரணம் யாதென மின்தூக்கியை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியிருந்தார். இந்தநிலையில், பாதுகாப்பு நோக்கத்தை கருத்தில்கொண்டு 6 பேர் மாத்திரம் மின்தூக்கியில் பயணிக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், மின்தூக்கி செயற்பாட்டாளர் ஒருவரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.