தோட்டத் தொழிலாளர்களுக்கு அரச நிதியிலிருந்து 50 ரூபா கொடுப்பனவு வழங்கத் தீர்மானம்

by Bella Dalima 13-02-2019 | 9:07 PM
Colombo (News 1st) தோட்டத் தொழிலாளர்களுக்கு அரச நிதியிலிருந்து 50 ரூபா கொடுப்பனவு வழங்கி சம்பளத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார். ஒரு இலட்சத்து நான்காயிரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா அதிகரிப்பினை ஒரு வருடத்திற்கு மாத்திரம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டார். இதனால் அரசாங்கத்திற்கு 1.2 பில்லியன் நிதி செலவாகும் எனவும் தேயிலை சபையின் நிதியையும் கடன் அடிப்படையில் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அக்கடனை அரசாங்கம் மீண்டும் செலுத்துவதற்கு கொள்கை ரீதியில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இன்னும் 10 நாட்கள் அல்லது இரு வாரங்களில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தினை சமர்ப்பிப்பதற்குத் தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் நவீன் திசாநாயக்க குறிப்பிட்டார். இதேவேளை, நிலுவை சம்பளம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார்,
நிலுவை இல்லை. மூன்று மாதங்கள் மாத்திரம் தாமதமாகியுள்ளது. 730, 750 ரூபாவிற்கும் இடைப்பட்ட வித்தியாசம் உள்ளது. 20 ரூபா வித்தியாசமுள்ளது. அதனை நிலுவையாக எடுத்துக்கொள்ள நாங்கள் சிந்திக்கவில்லை. தொழிற்சங்கங்கள் அதனைக் கேட்கவில்லை. அவ்வாறாயின், ஒரு நாளைக்கு 20 ரூபா. அது உண்மையில் கேலித்தனமான செயற்பாடு. தேயிலை சபையின் நிதியை வீண் விரயம் செய்வதற்கு எனக்கு விருப்பமில்லை.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.