குறுகிய கால அடிப்படையில் மேலதிக மின் கொள்வனவிற்கான நடவடிக்கையை எடுக்குமாறு உத்தரவு 

by Staff Writer 13-02-2019 | 6:14 PM
Colombo (News 1st) குறுகிய கால அடிப்படையில் மேலதிக மின் கொள்வனவு தொடர்பில் இலங்கை மின்சார சட்டத்திற்கு அமைய, இலங்கை மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரால், கடந்த 28 ஆம் திகதி அமைச்சரவை கொள்கை வகுப்பு குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் காணப்படும் விடயங்களை கருத்திற்கொண்டு அமைச்சரவை இந்த கட்டளையை பிறப்பித்துள்ளது. குறுகிய கால அடிப்படையில் மேலதிக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி கோரி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணைக்கு கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி அனுமதி கிடைத்தது. அவசர தேவைகளுக்கு குறித்த மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதால் அதனை அமுல்படுத்த முழுமையான அதிகாரத்தை துறைசார் அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த 28 ஆம் திகதி மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரால் அமைச்சரவை கொள்கை வகுப்பு குழுவின் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை மின்சார சபையின் ஊடாக விலை மனு கோரப்பட்டு மின்சாரத்தை கொள்வனவு செய்ய முற்பட்ட போது ஆணைக்குழுவின் முழுமையான அனுமதியை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கடந்த மாதம் 26 ஆம் திகதி சக்தியின் தேடல் ஊடாக நியூஸ்ஃபெஸ்ட் வௌிக்கொணர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.