ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணை முன்னெடுப்பு

அரச நிறுவன ஊழல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானம்

by Staff Writer 13-02-2019 | 6:56 AM
Colombo (News 1st) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 27 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கமைய ஏற்பட்டுள்ள இழப்பு வரிசைப்படுத்தப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் பரிந்துரை செய்துள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார். இதற்கிணங்க, ஊழல்கள் தொடர்பில் விசேட பயிற்சி பெற்ற குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2015 ஜனவரி 14 ஆம் திகதியிலிருந்து 2018 டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் மோசடி, அரச சொத்துக்களை வீணடித்தல், அரச ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் பொதுமக்கள் செய்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இவை தொடர்பிலான முறைப்பாடுகளை எதிர்வரும் மார்ச் மாதம் 7 அம் திகதி வரை பதிவு செய்ய முடியும். இதற்கமைய, எழுத்துமூலமான முறைப்பாடுகளை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் ஏற்றுக்கொள்ளப்படும். அதேநேரம், செயலாளர், அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, அறை எண் 210, இரண்டாவது மாடி, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு - 7 என்ற முகவரிக்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும். அத்துடன் 0112 - 665382 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை பதிவுசெய்ய முடியும்.