அமல் பெரேரா, மாகந்துரே மதுஷுடன் நாலக்க டி சில்வா தொடர்பு வைத்திருந்தாரா என விசாரணை

by Staff Writer 13-02-2019 | 8:47 PM
Colombo (News 1st) பாடகர் அமல் பெரேரா மற்றும் மாகந்துரே மதுஷ் ஆகியோருடன் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுவது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் இன்று அறிவித்தது. பாடகர் அமல் பெரேரா மற்றும் மாகந்துரே மதுஷ் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்கு எண்ணியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது. சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் அவர்களின் வாக்குமூலத்தை பெற எதிர்பார்த்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தது. 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி பாடகர் அமல் பெரேரா, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரை சந்திப்பதற்கு அவரின் அலுவலகத்திற்கு சென்றுள்ளதாகவும், அதன் ஊடாக அவர்களின் தொடர்பு தௌிவாவதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டது. பாடகர் அமல் பெரேரா, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில், என்ன விடயத்திற்காக நாலக்க டி சில்வாவை சந்திக்க வந்துள்ளீர்கள் என அங்கு கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அமல் பெரேராவிடம் வினவியுள்ளார். அதனால் கோபமடைந்த நாலக்க டி சில்வா, அந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியது. பின்னர் அவரை பயிற்சிக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றியமை உள்ளிட்ட மூன்று தண்டனைகளை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சூழ்ச்சி தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்த விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் இந்திய பிரஜை மர்சிலி தோமஸ் ஆகியோர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இந்திய பிரஜை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை குறித்து அடுத்த தவணையில் விடயங்களை முன்வைக்குமாறு புறக்கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க பொலிஸாருக்கு இன்று உத்தரவிட்டார். இதேவேளை, துபாய் பொலிஸார் கைது செய்துள்ள மாகந்துரே மதுஷின் இரண்டாவது தாரத்திற்கு சொந்தமான சப்புகஸ்கந்த பிரதேசத்திலுள்ள வீடொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று சோதனையிட்டனர். குறித்த பெண்ணின் உறவினர்களுக்கு சொந்தமானது என கூறப்படும் நவீன வேன் ஒன்றும் ஜீப் ஒன்றும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மாகந்துரே மதுஷூடன் கைது செய்யப்பட்ட கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் என சந்தேகிக்கப்படும் மொஹமட் நியாஸ் மொஹமட் அஸ்வர் என்ற 37 வயதான ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வியாபார நடவடிக்கையின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மாளிகாவத்தையிலுள்ள கஞ்சிப்பானை இம்ரானுக்கு சொந்தமான கட்டடமொன்றுக்கு பொறுப்பாக அவர் இருந்துள்ளார்.