மஹிந்தானந்த அளுத்கமகே மீது குற்றப்பத்திரம் தாக்கல்

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே மீது குற்றப்பத்திரம் தாக்கல்

by Staff Writer 12-02-2019 | 2:39 PM
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்டபோது, அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்குத் தேவையான ஆவணங்கள் தயார் செய்யப்படுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர். இந்த வழக்கை மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் பிரதம நீதியரசரின் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளதாகவும் இல்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பி பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முறைப்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்டபோது, விளையாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக ஐந்து கோடியே 35 இலட்சத்திற்கும் அதிக அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இரண்டாம் பிரதிவாதியாக சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் பெர்னாண்டோ இதற்கு முன்னர் பெயரிடப்பட்டிருந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, 14,000 கரம் போட்கள் மற்றும் 11,000 தாம் போட்கள் என்பனவற்றை கொள்வனவு செய்யும் போதே இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.