நதீமால் பெரேரா போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதி

by Staff Writer 12-02-2019 | 12:45 PM
Colombo (News 1st) துபாயில் வைத்து மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட நதீமால் பெரேரா போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என, குருதிப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. துபாய் பொலிஸாரை சந்தித்தபோது இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக, சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பாடகரான அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோர் சார்பில் தகவல்களை சமர்ப்பிப்பதற்காக, சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன துபாய்க்கு சென்றுள்ளார். அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா ஆகியோர் இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச ரீதியிலும் சிறந்த சிங்கள மொழிப் பாடகர்களாக உள்ளனர் என்பதற்கான ஆதராங்கள் துபாய் பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக, சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன நியூஸ்பெஸ்ட்டுக்குக் குறிப்பிட்டுள்ளார். இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள இவர்கள் பாடும் காட்சிகளை துபாய் பொலிஸாருக்கு காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அமல் பெரேராவின் குருதியில் போதைப்பொருள் கலந்துள்ளதா இல்லையா என்பது தொடர்பான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை என துபாய் பொலிஸார் கூறியதாகவும் சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். எனினும், கைது செய்யப்பட்டுள்ள அமல் மற்றும் நதீமால் ஆகிய இருவரையும் இதுவரையும் சந்திக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவருமான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. மாகந்துரே மதூஷுடன், பிரபல பாடகரான அமல் பெரேரா, அவருடைய மகனான நந்திமால் பெரேரா மற்றும் நடிகர் ரயன் வென்ங் ரோயன் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கடந்த 5 ஆம் திகதி துபாயில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 18 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாகவும் துபாய் சென்றுள்ள சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.