பொலிஸூக்கு அபகீர்த்தி ஏற்படுவது இவர்களால் அல்லவா?

பொலிஸூக்கு அபகீர்த்தி ஏற்படுவது இவ்வாறான நபர்களால் அல்லவா?

by Staff Writer 11-02-2019 | 8:39 PM
Colombo (News 1st) மினுவாங்கொடை - நில்பனாகொட பிரதேசத்தில் விபத்தொன்றின் பின்னர், மூவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை, நில்பனாகொடை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர், ஆயுதத்தைக் காண்பித்து வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை சீ.சீ.டி.வி. கெமராக்களில் பதிவாகியுளளது. ஆயுதத்துடன் வந்த நபர் அங்கிருந்த சிலரை தாக்கியதன் பின்னர், அருகிலுள்ள வாகன திருத்துமிடமொன்றுக்குக்குள் நுழைந்து அங்கிருந்த ஒருவரையும் தாக்கியுள்ளார். 119 எனும் அவசர அழைப்பு இலக்கத்திற்குக் கிடைத்த தகவலுக்கமைய, மினுவாங்கொடை பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முன்னர், அந்த நபர் அங்கிருந்து வௌியேறியுள்ளதுடன், பின்னர் அருகிலுள்ள வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டார். இந்தநிலையில், இவ்வாறு செயற்பட்ட நபர், கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பொலிஸ் அதிகாரி என தெரியவந்துள்ளது. பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோதிலும், அவர் வைத்திருந்த ஆயுதத்தை பொலிஸார் கைப்பற்றவில்லை எனத் தெரிவித்து, மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு சிலர் கூடினர்.
இவர் பொலிஸூக்கு என்ன கூறினார் என எமக்கு சரியாக தெரியாது. பாதாள குழுவைச் சேர்ந்தவரா என்றும் தெரியவில்லை. அவர் கொண்டு வந்த கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதா என மக்கள் வினவியபோது பொலிஸார் அதுகுறித்து எமக்கு தெரிவிக்கவில்லை. குறித்த நபர் ஒரு மணியளவில் கைது செய்யப்பட்டார். நாம் அதிகாலை 2 மணி வரை பொலிஸில் இருந்தோம். அந்த வேளையில்கூட அவரின் கைத்துப்பாக்கி கைப்பற்றப்படவில்லை. அதுவே பிரச்சினை. அந்த துப்பாக்கிக்கு என்ன நடந்தது
என சம்பவ இடத்திலிருந்த நபர் ஒருவர் வினவியுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மூவர் மினுவாங்கொடை கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இந்தநிலையில், கட்டுநாயக்க பொலிஸில் சேவையாற்றும் இந்த அதிகாரி இன்று மினுவாங்கொடை நீதவான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் இதன்போது உத்தரவிடப்பட்டது. பொலிஸூக்கு அபகீர்த்தி ஏற்படுவது இவ்வாறான நபர்களால் அல்லவா?