by Fazlullah Mubarak 11-02-2019 | 2:06 PM
Colombo (News 1st) மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவுசெய்யப்படும் என எதிர்பார்ப்பதாக, அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மனித எச்சங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் காபன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி கையளிக்கப்பட்டன.
மனித எச்சங்கள் மீதான காபன் பரிசோதனைக்கு இரண்டு வார கால அவகாசம் கோரப்பட்டதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
ஆய்வறிக்கையை பார்வையிடுவதற்கான இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி தமக்கு வழங்கப்பட்டுள்ளதால், ஆய்வின் முடிவை இணையத்தளத்தினூடாக பார்வையிட முடியும் என அவர் கூறியுள்ளார்.
எனினும், அறிக்கையின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகளைத் தனக்கும், மன்னார் மாவட்ட நீதவானுக்கும் பொதி சேவையூடாக அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
இதேவேளை, மன்னார் சதொச கட்டட வளாகத்திலுள்ள மனித புதைகுழியில் 141 ஆவது நாளாக இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 315 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையில், 307 மனித எச்சங்கள் குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அவற்றில் 26 மனித எச்சங்கள் சிறார்களுடையது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.