by Bella Dalima 09-02-2019 | 8:56 PM
Colombo (News 1st) துபாயில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் மாகந்துரே மதுஷுடன் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவருடையது என கூறப்படும் காரொன்று பாதுக்கையில் பொலிஸாரால் இன்று கைப்பற்றப்பட்டது.
பாதுக்கை - போரேகெதர, அரலிய மாவத்தையிலுள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கார் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்த 54 மற்றும் 26 வயதான இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாகந்துரே மதுஷுடன் தொடர்பு வைத்திருந்த பெண், சில மாதங்களுக்கு முன்னர் துபாய்க்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், அவர் மஹரகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண், 2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த பாதாள உலக தலைவரான களு துஷாரவின் மனைவி என பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கார் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, துபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷின் உதவியாளர் என கருதப்படும் ஜங்கா எனப்படும் அனுஷ்க கவிஷாலுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ கோப்ரல் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவரை பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஜங்கா எனப்படும் அனுஷ்க கவிஷாலின் வீடு பொலிஸாரினால் நேற்று (08) சோதனையிடப்பட்ட சந்தர்ப்பத்தில், இராணுவ சீருடைக்கு சமமான 8 சீருடைகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சீருடைகள் கைது செய்யப்பட்ட கோப்ராலுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அதற்கமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, மாகந்துரே மதுஷூடன் துபாயில் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வேன் ரூயன் (Ryan Van Rooyen) பயன்படுத்திய கார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் வெலிகம பொலிஸாரால் உடுபில பகுதியில் வைத்து கார் கைப்பற்றப்பட்டுள்ளது.
மதுஷூடன் கைது செய்யப்பட்ட ”சன்ஷைன் சுத்தா” என அழைக்கப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவாவின் ஹோட்டலொன்றில் இருந்தே கார் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிறிதொரு நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த குறித்த காரை, ரயன் பயன்படுத்தியுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.