வெனிசுவேலாவில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு

மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டதால் வெனிசுவேலாவில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு

by Bella Dalima 09-02-2019 | 6:16 PM
மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால் வெனிசுவேலாவில் இதுவரை 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். வெனிசுவேலாவிற்கு சர்வதேசத்தின் உதவி தேவையில்லை என தெரிவித்து, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ எல்லைகளை மூடியுள்ளார். இதனால் அங்குள்ள மக்கள் உணவு , நீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். பசிப்பிணியால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பார்சிலோனாவிலுள்ள வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோய் தாக்கங்களுக்குட்பட்டுள்ள மக்களுக்கான மருந்துகளை வழங்குவதிலும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இதனிடையே, வெனிசுவேலா மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கத் தயாராகவுள்ளதாக தொண்டர் படை தெரிவித்துள்ளது. கொலம்பியாவின் குகடா எல்லைப் பகுதியில், உதவிப்பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், நிக்கலஸ் மதுரோவின் கொள்கையினால் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உதவிப் பொருட்களை ஏற்றிச்சென்ற லொரிகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. வெனிசுவேலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நீடிப்பதால், அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவைடோ தன்னை நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டமையால் அங்கு அரசியல் குழப்பம் நீடிக்கின்றது.