சுவாமி விபுலானந்தரின் மருமகள் கோமேதகவள்ளியின் பூதவுடல் தீயில் சங்கமம்

by Staff Writer 09-02-2019 | 8:38 PM
Colombo (News 1st) சுவாமி விபுலானந்தரின் மருமகளான செல்லத்துரை கோமேதகவள்ளியின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றன. செல்லத்துரை கோமேதகவள்ளி தனது 92 ஆவது வயதில் நேற்று (08) காலமானர். ஆசிரியராகவும் அதிபராகவும் சேவைபுரிந்த செல்லத்துரை கோமேதகவள்ளி மூன்று பிள்ளைகளின் தாயாராவார். அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக காரைத்தீவிலுள்ள வீட்டில் வைக்கப்பட்டு, இன்று இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன. காரைத்தீவு பொது மயானத்தில் பூதவுடல் தீயுடன் சங்கமமானது. முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் அமிர்தவல்லி, மரகதவல்லி எனும் இரு சகோதரிகளில் மரகதவல்லியின் கருவில் உதித்த திருவே செல்லத்துரை கோமேதகவள்ளி. விபுலானந்த சுவாமி இவருக்கு சூட்டிய செல்லப்பெயர் கண்ணம்மா. ஈழத்தின் முதல் தமிழ் பேராசிரியரின் கரங்களால் எழுதப்பட்ட விலை மதிக்க முடியாத பல கடிதங்களின் பேசுபொருளாக இருந்தவரே காரைத்தீவில் வசித்த கண்ணம்மா. சுவாமி விபுலானந்த அடிகளுடன் இரண்டறக் கலந்து உறவாடி எஞ்சி நின்ற இந்தத் தமிழின் மருமகளின் இழப்பு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பாரிய இழப்பாகும்.