ஐ.நா. வழங்கும் கால அவகாசத்தால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது: சி.வி.விக்னேஷ்வரன்

by Bella Dalima 09-02-2019 | 8:22 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படுகின்ற கால அவகாசமானது இலங்கை அரசாங்கத்திற்கு நன்மையாக அமையுமே தவிர, தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். இவ்வாறு கால அவகாசம் வழங்கப்படும் பட்சத்தில், தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசம் மறந்துவிடும் எனவும் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார். வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட 'இனப்படுகொலை' தீர்மானம் தொடர்பில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டவர்களும் தான் அதனைச் செய்ய முன்வர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஷ்வரன் பதிலளித்தார்.