ATM பாவனையின் போது அவதானமாக செயற்படுக

ATM பாவனையின் போது அவதானமாக செயற்படுமாறு மத்திய வங்கி அறிவுறுத்தல்

by Staff Writer 08-02-2019 | 3:50 PM
Colombo (News 1st) ATM இயந்திரமூடான கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் போது அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. மின்னணு சிப் (Electronic Chip) உடனான அட்டைகளை மாத்திரம் கொடுக்கல் வாங்கலில் பயன்படுத்துமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சிப் உடனான அட்டைகள் மிகவும் பாதுகாப்பானது எனவும் கொடுப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் பிரிவின் பணிப்பாளர் தர்ம ஶ்ரீ குமாரதுங்க தெரிவித்தார். பாதுகாப்பான அட்டைகளை அனைவருக்கும் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், வாடிக்கையாளர்கள் பணத்தை மீளப்பெறும் போது, குறுந்தகவல் மூலம் அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்ம ஶ்ரீ குமாரதுங்க கூறினார். இதேவேளை, ATM இயந்திரமூடாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுகையில், சூழவுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுபவர்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விடயம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். இலங்கையிலுள்ள வங்கிகளில் காணப்படும் ATM எனப்படும் தன்னியக்க இயந்திரங்களில், கருவியொன்றைப் பொருத்தி அதனூடாக வாடிக்கையாளர்களின் தரவுகள் குழுவொன்றினால் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.