மாகந்துரே மதுஷூடன் கைதானோரின் வீடுகளில் சோதனை: இராணுவ சீருடை, கஞ்சா மீட்பு

by Staff Writer 08-02-2019 | 8:03 PM
Colombo (News 1st) மாகந்துரே மதுஷூடன் துபாயில் கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களின் வீடுகளை பொலிஸார் இன்று சோதனையிட்டனர். மாகந்துரே மதுஷின் உதவியாளரான ஜங்கா எனப்படும் அனுஷ்க கவிஷாலின் கந்தர - தலல்ல பிரதேசத்திலுள்ள வீடு இன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இராணுவத்தின் சீருடையுடன் ஒப்பிடக்கூடிய 8 ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், T 56 ரக 32 ரவைகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த 67 வயதான அனுஷ்க கவிஷாலின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். மாகந்துரயிலுள்ள மதுஷின் வீட்டையும் இன்று பொலிஸார் சோதனையிட்டதுடன், அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான எதனையும் பொலிஸார் மீட்கவில்லை. இதேவேளை, துபாயில் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் ரோவனின் காரில் இருந்து 5 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிகம - மிரிஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றை சோதனையிட்ட போதே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், துபாயில் கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் அதிகாரி என கூறப்படும் லலித் குரேவின் வீட்டையும் பொலிஸார் இன்று சோதனையிட்டனர். கம்புறுப்பிட்டிய பிரதேச சபை ஊழியர் என கூறப்படும் சரித் என்ற நபரின் வீடும், மீன் வியாபாரியான லங்கா என்ற நபரின் வீடும் இன்று பொலிஸாரால் சோதனைக்குட்படுத்தப்பட்டன. குமார என்ற வர்த்தகர் ஒருவரின் வீடும் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறினர். அவர்களின் வீடுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.