மாகந்துரே மதூஷின் இரத்த மாதிரியை வைத்து விசாரணை

மாகந்துரே மதூஷ் உள்ளிட்டோரின் இரத்த மாதிரிகளை வைத்து மேலதிக விசாரணை

by Staff Writer 07-02-2019 | 7:07 AM
Colombo (News 1st) துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக்குழு தலைவருமான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேரின் இரத்தமாதிரிகள் துபாய் பாதுகாப்புப் பிரிவினரால் பெறப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தனரா என்பது தொடர்பில் ஆராய்வதற்கே அவர்களின் இரத்தமாதிரி பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில், சந்தேகநபர்களை தடுத்துவைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து செல்வதாக துபாய் பாதுகாப்புப் பிரிவினர் அறிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பிலான சட்ட ஆலோசனைகளை எவ்வேளையிலும் வழங்குவதற்கு தயார் என சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், பாதுகாப்புத் தரப்பினர் இதுவரை சட்ட ஆலோசனைகளை கோரவில்லை என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருமாகிய மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட 25 பேர் துபாயில் வைத்து நேற்று முன்தினம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தனர். துபாய் பொலிஸாரும் இலங்கை அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேநேரம், கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனவும் கஞ்சிப்பானை இம்றான், கெசல்வத்தே தினுக்க உள்ளிட்டவர்களும் இதில் அடங்குவதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையின் பிரபல பாடகர் அமல் பெரேரா, அவருடைய மகன் மற்றும் நடிகர் ஒருவரும் அடங்குகின்றனர். இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள குழுவில் இலங்கை இராஜதந்திர கடவுச்சீட்டுள்ள ஒருவரும் அடங்குவதாக துபாயின் 'கலீஞ் டைம்ஸ்' என்ற பத்திரிகை நேற்று செய்தி வௌியட்டது. மாகந்துரே மதூஷின் பிள்ளையின் பிறந்தநாள் வைபவத்தில் இவர்கள் 25 பேரும் பங்குபற்றியதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.