சக்தி தொலைக்காட்சியின் பெயரில் பொய் பிரசாரங்கள்

by Staff Writer 07-02-2019 | 9:42 PM
Colombo (News 1st) ATM கருவிகளில் முன்னெடுக்கப்படுகின்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் சக்தி TV என குறிப்பிடப்பட்டு தகவலொன்று அண்மைக்காலமாக WhatsApp மற்றும் குறுந்தகவல் ஊடாக பரப்பப்படுகின்றது. வங்கிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு சக்தி TV எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அத்தகைய குறுந்தகவல் ஒன்றை வௌியிடவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றோம். தகவல் பரப்புவோரின் பெயர் விபரங்கள், ஆள் அடையாளம் இல்லாமல் இத்தகைய தகவல்கள் பரப்பப்படுவதால், பாரிய சமூகப்பிரச்சினை எழுந்துள்ளதை நியூஸ்ஃபெஸ்ட் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. முகங்களை மறைத்துக்கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற இத்தகையை பொய் பிரசாரங்கள் காரணமாக ஏற்பட்ட அழிவுக்கு கண்டி - திகன சம்பவம் சான்று பகர்கின்றது. இந்த சம்பவத்தை அடுத்து, தனிப்பட்ட கணக்குகளில் இருந்து தகவல்களை பரிமாறும் போது, புதிய பாதுகாப்பு வழிமுறைகளை ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. WhatsApp நிறுவனமும் ஏற்கனவே ஒரு செய்தியை ஒரே தடவையில் அனுப்பக்கூடிய கணக்குகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், தொடர்ந்தும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் முன்னெடுக்கப்படுகின்ற பிரசாரங்களால் சமூகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முகங்களை மறைத்துக்கொண்ட கும்பல்கள் ஊடக நிறுவனங்களுக்கு முன்பாக அண்மையில் செயற்பட்ட விதம் நினைவில் உள்ளதா? மக்களுக்கு முன்தோன்றி தகவல்களை வௌியிடுவதற்குள்ள அச்சம் காரணமாக மறைந்திருந்து பொய் பிரசாரங்களை பரப்பும் குழுக்களின் பின்புலத்திலும் இத்தகைய நபர்கள் இருக்கலாம் அல்லவா? அங்கீகரிக்கப்பட்ட இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் உரிமையாளர்கள் தொடர்பில் நாட்டு மக்கள் அறிவார்கள். அவர்கள் தமது நிலைப்பாட்டிற்கான பொறுப்பையும் ஏற்கின்றார்கள். எனினும், அடையாளமின்றி செய்பவற்றுக்கு பொறுப்பேற்பது யார்? ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தமக்கு சார்பான சமூக வலைத்தளங்களை வழிநடத்துகின்றனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் பணத்திற்குள் மறைந்து மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இத்தகைய நபர்கள் மற்றும் அவர்களால் வழிநடத்தப்படுகின்ற சமூக வலைத்தளங்கள் தொடர்பில் நாட்டு மக்கள் தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஏனைய செய்திகள்