ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி நிகழ்வில் மது போதையுடன் கலந்துகொண்ட ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

by Staff Writer 06-02-2019 | 8:05 PM
Colombo (News 1st) ஶ்ரீபாத கல்வியற்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மது போதையுடன் ஊழியர்கள் சிலர் கலந்துகொண்டமை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றிரவு (05) நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஊழியர்கள் மது போதையுடன் கலந்துகொண்டதாக கல்வியற்கல்லூரிகள் ஆணையாளர் K.M.H. பண்டார தெரிவித்தார். இது தொடர்பிலான காணொளி தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட குழுவினால் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர்கள் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கல்லூரியின் ஆணையாளர் K.M.H. பண்டார மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, ஶ்ரீபாத கல்வியற்கல்லூரியின் ஆசிரியர் பயிலுனர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஶ்ரீபாத கல்வியற்கல்லூரிக்கு இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இன்று சென்றிருந்தார். ஆசிரியர் பயிலுனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இராஜாங்க அமைச்சர் இதன்போது கலந்துரையாடினார். இதேவேளை, பத்தனை ஸ்ரீபாத கல்வியியற்கல்லூரியின் சமையலறைக்கு நேற்று மாலை சீல் வைக்கப்பட்டது. கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரது பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.