மாகந்துரே மதுஷூடன் கைதானவர்களில் இராஜதந்திர கடவுச்சீட்டுள்ள ஒருவரும் அடங்குவதாக தகவல்

by Staff Writer 06-02-2019 | 7:50 PM
Colombo (News 1st) துபாயில் ஹோட்டல் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவருமான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவில் இராஜதந்திர கடவுச்சீட்டுள்ள ஒருவரும் அடங்குவதாக அந்நாட்டின் கலீஜ் டைம்ஸ் என்ற பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டுள்ளது. சந்தேகநபர்கள் தமது பொறுப்பில் இருப்பதாக துபாய் பொலிஸார் உறுதி செய்துள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவர் எனவும் கூறப்படும் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் போதைப்பொருளுடன் துபாயிலுள்ள ​ஹோட்டலொன்றில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் நேற்று (05) தெரிவித்தனர். எனினும், 20 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக துபாயின் கலீஜ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இந்த சுற்றிவளைப்பை துபாய் பொலிஸாரும் இலங்கை அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இருநாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடி வருவதாக கலீஜ் டைம்ஸ் பத்திரிகை மேலும் செய்தி வௌியிட்டுள்ளது. இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை பாதுகாப்பு அமைச்சும் வௌிவிவகார அமைச்சும் இணைந்து மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஐவர் இருப்பதுடன், அவர்களில் கஞ்சிப்பானை இம்ரான், அங்கொட சூட்டி உள்ளிட்ட பிரபல குற்றவாளிகள் பலரும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். மாகந்துரே மதுஷின் பிள்ளையொன்றின் பிறந்ததின நிகழ்வில் இவர்கள் 25 பேரும் கலந்துகொண்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.